மும்பை: பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை 2 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று, ஜாமின் மனு மீதான விசாரணையில்  மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என அறிவித்து உள்ளது.

இன்டீரியர் டிசைனர் அன்வய் நாயக் 2018ம் ஆண்டு தற்கொலை  செய்துகொண்டது தொடர்பான வழக்கில், அவர் தற்கொலை முடிவை எடுக்க தூண்டியதாக,  ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி (47) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.  இந்த வழக்கு தொடர்பாக மேலும் பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் நீதிமன்ற காவலி 18ந்ததி வரை உள்ளது.  அவர்கள், அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். இநத் நிலையில், அர்னாப் செல்போன் உபயோகப்படுத்தியதாக கூறி, அவரை தலோஜா சிறைக்கு காவல்துறையினர்  மாற்றியுள்ளனர்.

இதற்கிடையே ஜாமீன் கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில்  அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை  முழுவதும் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அர்னாப் ஜாமின் தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு  உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நேற்று இரவு 9 மணிக்கு நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.