Random image

சிதைந்து கிடக்கும் கே.டானியலின் கல்லறை: கவனிப்பாரா “காலா” ரஞ்சித்?

கே. டேனியல் புத்தகம்

ஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த`கபாலி’ படத்தின் அறிமுகக் காட்சியில் `மை ஃபாதர் பாலையா’ என்ற புத்தகத்தை ரஜினி படித்துக்கொண்டிருப்பார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் சத்தியநாராயணா, தெலுங்கில் எழுதிய `மா நானயா பாலையா’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் படத்தில் இடம்பெற்ற அந்த புத்தகம்.

கரீம் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணா, தலித் மக்களின் போராட்டத்தை விளக்கும்வகையில், தன் தந்தை பாலையா நடத்திய போராட்டங்களை  அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இப்போது “காலா” படத்திலும் அது போல “கே.டானியல்  படைப்புகள்’ என்ற புத்தகம் இடம் பெற்றுள்ளது. பஞ்சமர், கோவிந்தன்,  அடிமைகள், கானல் , பஞ்ச கோணங்கள், தண்ணீர் என ஆறு நாவல்கள் உள்ள `கே டானியல் படைப்புகள்’ என்ற புத்தகம் அது.  இலங்கையில் வசிக்கும் தலித் மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நிஜக் கதைகள் அவை.

புகழ் பெற்ற எழுத்தாளரான கே. டானியல், இலங்கை வடக்கு மாகாணப் பகுதியின் ஆனைக்கோட்டையில் 1929-ம் வருடம் பிறந்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்,  தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர், எழுதியவர்.

“காலா”வில் டேனியல் புத்தகம்

இவர், தலைமை ஏற்று நடத்திய `தீண்டாமை ஒழிப்பு’ப் போராட்டம்” இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

`கே டானியல் படைப்புகள்’  என்ற புத்தகத்தில் உள்ள பஞ்சமர் நாவல், `தலித்’ மக்களின் கடும் உழைப்பு, தியாக உணர்வு முதலிய நற்குணங்கள் வெளிப்படுத்துகின்றன.

1972-ம் ஆண்டில், டானியல் எழுதிய முதல் நாவல், இது. “உயர் சாதியினரின்” அத்து மீறல்களை எதிர்த்துப் போராடும் இளைஞனின் கதை இது.

தஞ்சை ராஜாகோரி சுடுகாடு.. டேனியல் சமாதி எங்கே?

“கானல்” நாவலில், பரம்பரை பரம்பரையாக சைவ மதத்தையே தழுவிவந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கள் அவல வாழ்க்கையை மாற்ற கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும்  இதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சித்தரிக்கிறார் நாவலாசிரியர் டேனியல்.

இப்படி டேனியலில் ஒவ்வொரு படைப்பும், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் வாழ்வைச் சொல்பவை.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த அவர், உடல் நலம் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக தஞ்சை வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 1986ம் அங்கேயே மரணமடைந்தார்.

 

அந்த நேரத்தில் அவரின் உடலை ஈழத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழல். ஆகவே தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த இடதுசாரி தோழர்கள் தஞ்சை ராஜாகோரி சுடுகாட்டிலேயே அவரது உடலைப் புதைத்தனர்.

அங்கே ஏற்கெனவே இருக்கும்  பட்டுக் கோட்டை அழகிரியின் சமாதிக்கு நேர் அருகில் அடக்கம் செய்து, அந்தக் கல்லறைக்கு மேல் நினைவுக் கல்லும் நட்டனர்.

ஆனால் காலப்போக்கில் கல்லறை சிதிலமடைந்து மறைந்தே போய்விட்டது. தற்போது டேனியலில் டானியலின் நினைவுக் கல்லும் இல்லை ..கல்லறையும் இல்லை.

பா.ரஞ்சித்“வாழ்நாள் முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய அந்த போராளியின் சமாதியைக்கூட காக்க முடியவில்லை நம்மால்.

அவரது எழுத்துக்களின் வீரியத்தை உணர்ந்து தனது திரைப்படத்தில் பயன்படுத்தும் இயக்குநர் பா.ரஞ்சித்தாவது டேனியலின் கல்லறையை மீட்டு புதிதாக கட்ட முயற்சிக்க வேண்டும்.

இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படத்தில் மட்டும் புரட்சிகர காட்சிகளை வைப்பவர் அல்ல. அதையும் மீறி பொதுத்தளத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இயங்கி வருகிறார். ஆகவே அவரே டேனியலின் கல்லறையை மீட்க முன்னிற்க வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ரஞ்சித் அதைச் செய்வார் என்று நம்புவோம்.

–    டி.வி.எஸ். சோமு