Random image

தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக கே.பி.மகேந்திரன் நியமனம்?

மிழக காவல்துறை டி.ஜி.பி.யாக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. கே.பி. மகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2016ஆம் வருடம் சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, குட்கா ஊழல் விவகாரம் வெளிவரக்காரணமானது.  இது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து , கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து மூன்று மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ, முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை ஆரம்பித்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி மாதவராவுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான மாதவராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டது. இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக   40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் விடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களின் பினாமிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில்  சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,  தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பு சில மணி நேரம் நீடித்தது.

இதற்கிடையே  டி.கே.ராஜேந்திரன் மாற்றப்படலாம் என்று ஒரு யூகத்தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்தின் புதிய டிஜிபியாக தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி- கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.