டில்லி:

மிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பபடாமல்  இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி உள்ளது தமிழக தேர்தல் ஆணையம். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வழக்குகளை அடுத்து,  உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, உச்சநீதி மன்றம்  உத்தரவின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழகஅரசு உறுதி அளித்தது.  அதற்கு ஏற்றார்போல, கடந்த மே மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டிருந்தது.  மேலும்,   மாநகராட்சிகளில் 1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடி களும் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறி இருந்தது.  அதைத்தொடர்ந்த, வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த நிலையில்,  தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை அளிக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது.  இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு பகுதி சென்னை வந்தடைந்தன.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கோரிய அளவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதாகவும், இவிஎம் இயந்திரங்கள்  மராட்டியம், அரியானாவுக்கு சட்டமன்ற தேர்தலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறி உள்ளது. இதைத்தொடர்ந்து, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த விசாரணையின்போது தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் தேதியை அக்டோபர் 31க்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.