சென்னை: தற்போது பரவி வரும் புதியவகை கொரோனா மற்றும் பொதுமுடக்கம்  மற்றும் தளர்வுகள் குறித்து, நாளை மறுதினம் (26ந்தேதி) தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன்  ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கத்தை, தொடர்ந்து, மாவட்டம்தோறும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர்   எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை செயலாளர் கே.சண்முகம் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முடக்கம் மற்றும் தளர்வுகள் டிசம்பர் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்,  மருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி  ஆலோசனை நடத்த உள்ளார்.  முன்னதாக 26ந்தேதி மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து,  அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று பொதுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டத்தை தமிழக தலைமை செயலாளர் நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் 26-ந்தேதி (நாளை மறுதினம்) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.

மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள்; வறுமை கோட்டுக்கு கீழ் வருவோருக்கான காப்பீட்டு திட்டம்; பிரதமரின் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வரும் ஊரக வீட்டு வசதி திட்டம்; கொரோனா மேலாண்மை உள்ளிட்ட சில அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

எனவே இவை பற்றிய முழு விவரங்களுடன் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டங்களுக்கு பின்னர் கொரோனா ஊரடங்கு நீடிப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து வருகிறது.