தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

--

நெட்டிசன்:

மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு

 

2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை ஆட்கொண்டது…நிலத்தால், நீரால் பிரிந்திருந்த உலகத்தை ஒன்றிணைத்தது கொரோனா…
ஐந்தில் நான்கு கண்டங்களையும், அனைத்து கடல் வழிப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது கொரோனா.. (முன்னுரை போதும் என்று நினைக்கின்றேன்)

மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நம் மாநில, மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன… கடந்த மூன்று மாதங்களாக நமது அரசு இயந்திரங்கள் கடிகாரம் போல ஓய்வில்லாமல் செயல்படுகின்றன…(குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வருடத்திற்கு அவர்களுக்கு ஓய்வு இல்லை)

சீனா, அமெரிக்காவை தவிர்த்து பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட இந்தியாவின் ஜனத்தொகை அதிகம்(137 கோடி)..

ஆனால்,நமது அரசு இயந்திரத்தின் ( மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ) எண்ணிக்கை ஒரு கோடிக்கும் குறைவு…
வளர்ந்த நாடுகளுக்கே பெரும் சவாலாக இருக்கும் கொரோனா, இந்தியாவைப் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நாட்டை எப்படி துவைத்து எடுக்கும் என்பது உங்களுக்கே தெரியும்…

இந்தத் தருணத்தில்,சிறுவர் முதல் பெரியவர் வரை நம் அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி-

“கொரோனா பாதிப்பு எப்பொழுது முழுவதுமாக மறையும் ??? “

மக்கள்தொகையில் 60 % கொரோனாவால் பாதிக்கப்பட்டால் , மட்டுமே இதன் தாக்கம் முழுவதுமாக மறையும்…
அதாவது, உலக மக்கள் தொகை 700 கோடியில், 400 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு , #HerdImmunity (கூட்டு எதிர்ப்பு சக்தி)பெற்றால்தான் இயற்கையாக கொரோனா மறையும்… இதற்கு மற்றொரு வழி, தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்ப்பது…

இந்திய நாட்டில் குறைந்தபட்சம் 60% பாதிக்கப்பட்டால் (82 கோடி மக்கள்) தான் கொரோனா முற்றிலுமாக ஒழியும்… அப்பொழுதுதான் Herd immunity நம்மை பாதுகாக்கும்..
தற்பொழுது 4 லட்சம் மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் அதாவது நம் மக்கள் தொகையில் 0.0003% மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.😲

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மற்ற நாடுகளை விட அதிக அளவில் இருக்கும் … மார்ச் மாதத்தில் 30வது இடத்தில் இருந்த இந்தியா, ஜூன் மாதத்தில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது இதனால்தான்…
ஜூலை மாதத்திற்குள் , அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து விடும்… நாளொன்றுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர்… ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும்(ஜூலை,ஆகஸ்ட் மாதத்தில்)…

மற்ற நாடுகளை விட சென்னையில் உள்ள கொரோனா வைரஸின் தன்மை(வீரியம்) மாறுபட்டது …
பாதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் நுரையீரல் செயல்பாடு முற்றிலுமாக குறைந்து இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும்….கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா மரணங்கள் இதற்கு சாட்சி…

இந்த நிலையில் Lockdown 6.0,7.0,8.0 போன்றவை அவசியமா? ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட Lockdowns பயன் அளித்துள்ளதா ? என்ற பல கேள்விகள் நம்மிடையே உள்ளது….

1) கொரோனாவை கட்டுப்படுத்த, #SelfLockdown மிக மிக முக்கியம்.. அதாவது சுய கட்டுப்பாடு… Lockdown 5.0 (ஜூன் 1 முதல் ஜூன் 15) மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது… இரவு 9 மணி வரை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளியே செல்லலாம் , மதுக்கடைகள் திறப்பு, ஆட்டோ- தனியார் பேருந்துகள் இயக்கம், போன்றவை கொரோனாவே காரித்துப்பும் அளவுக்கு இருந்தது…காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கொரோனா நமக்கு லீவ் விட்டது போல நம் மக்கள் நடந்து கொண்டது அறியாமையின் உச்சக்கட்டம்…

2) சென்னை மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற புரிதலை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.. சென்னையின் மக்கள் தொகையில் 20 லட்சம் பேர் ஏற்கனவே சொந்த ஊருக்கு சென்று விட்டனர் ( மார்ச் Lockdown1.0 )

தற்போது மேலும் 20 லட்சம் பேர் சொந்த ஊருக்கு செல்லும் வண்ணம் உள்ளனர்… இது கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்… தற்போது சென்னையில் அதிகமாக பரவி வரும் கொரோனா , சீக்கிரமாக கூட்டு எதிர்ப்பு சக்தியை சென்னை மக்களுக்கு கொடுக்கும்(Herd immunity)..அதன் காரணமாக இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் சென்னை மக்களுக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் குறைந்து விடும்…இந்த உண்மை தெரியாமல், அவசர அவசரமாக வெளியூர் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் அபாயம் அதிகமாகும்… சென்னையிலிருந்து இந்த கொடிய வீரியம் கொண்ட வைரஸ் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவும்…#ContainChennai

3) அடுத்த ஒரு வருடத்திற்கு (தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கட்டாயம் வழங்க வேண்டும்… குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பு நம்மிடம் இல்லை…#CloseSchoolsCollegesForOneyear
அரசாங்கமே ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும், தனியாக தொலைக்காட்சி சேனல்களை தொடங்கி அவர்களுக்கு பொதுவான பாடம் எடுக்கலாம்…

4) மருத்துவர்கள், செவிலியர்கள் , மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இனி வரும் நாட்களில் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள்… சீனாவின் யுஹான் மாகாணத்தில் பிப்ரவரி மாதம் இதுதான் நடந்தது… உடனடியாக விழித்துக் கொண்ட சீன அரசு அதை திறம்பட சமாளித்தது…. மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை தடையின்றி அரசு வழங்கிட வேண்டும்… #SaveHealthworkers .. தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் போருக்கு அழைத்து செல்லும் அவர்களைப் பேணிக் காக்க வேண்டும்…

5) 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்ற அவசரசட்டம் இயற்ற வேண்டும்… மக்களுக்கு தேவையான வீட்டு பொருள் முதல் காய்கறி வரை அனைத்தையும் வீட்டிலேயே ( #DoorDelivery) ரேஷன் மூலம் வழங்கிட வேண்டும்… விவசாயிகளை நேரடியாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்..

6) அரசு, தனியார் பணியில் இருக்கும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் #WorkfromHome வீட்டிலிருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்..

7) போக்குவரத்து , கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அனைத்தையும் அரசுடமையாக்க (தற்காலிகமாக) வேண்டும்… மருத்துவமனைகள், தனியார் கிளினிக், மருந்துக்கடைகள், மினி பஸ் , தனியார் பேருந்துகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தையும் அரசே தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இயக்கவேண்டும்… அந்த தொழில் சார்ந்த நபர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கிட வேண்டும்.#NationalisePrivateSector

8) அரசியலமைப்புச் சட்டம், Article 360 அமல்படுத்தி குடியரசுத் தலைவர் பொருளாதார அவசரநிலையை நாடு முழுவதிலும் பிரகடனப்படுத்த வேண்டும்..நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை #ImplementFinancialEmergency_Article360 . மக்களின் பொருளாதார சிக்கலை போக்க அதுமட்டுமே தீர்வு.. வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டிகளை ஒரு ஆண்டுக்கு வசூலிக்கக் கூடாது என்பன அப்பொழுது தான் சாத்தியம்..

9)வளர்ந்த நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் அதனை காலதாமதமின்றி இந்திய நாட்டிலும் தயாரிக்க ஆவணம் செய்ய வேண்டும். #EarlyVaccineAvialability.. கொரோனாவை சீக்கிரம் கட்டுப்படுத்த அது மட்டும் தான் தீர்வு..

10) மூன்று மாதங்களாக முடங்கிக் கிடக்கும் மக்கள் மன்றங்களான சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டத்தை காணொளி காட்சி மூலம் இயக்க வேண்டும்… மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதி மக்களின் இன்னல்களை எடுத்துக்கூறி தேவையான உதவிகளை பெற வேண்டும்..#OnlineParliamentAssembly . அமைப்புசாரா தொழிலாளர்கள், தினக்கூலிகளின் நிதி நெருக்கடியை போக்கிட மக்கள் பிரதிநிதிகள் முனைப்பு காட்ட வேண்டும்…

மேலே சொன்னவற்றை அரசாங்கம் செய்யத் தவறினால் பேரிழப்பு நிச்சயம் ஏற்படும்… உயிரிழப்புகளும் லட்சங்களை தாண்டக் கூடும்…

எனவே, இவை அனைத்தையும் செய்ய Lockdown கட்டாயம் தேவை.. 100 கோடிக்கு மேல் உள்ள மக்களை கட்டுப்படுத்த லாக் டவுன் நிச்சயம் தேவை…இன்னும் மூன்று மாதங்கள் கூட Lockdown தொடர்வது நல்லது..(நீங்கள் விரும்பாவிட்டாலும், அதுதான் நல்லது)..கொரோனாவை முதலில் கட்டுப்படுத்திய சீனாவில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்…

அடுத்த இரண்டு ஆண்டுகள் சுய ஒழுக்கத்தை நாம் அனைவரும் கடை பிடித்தாக வேண்டும்… இல்லையென்றால் 5–6 ஆண்டுகள் ஆனாலும் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது….

Lockdown அவசியம்..

Self lockdown அதனினும் அவசியம்..

(கொரோனாவை கட்டுப்படுத்தும் தற்போதைய தடுப்பூசி அதுதான்)