வேலுமணி

ப்போது சமூகவலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெரும் விவாத்த்தை ஏற்படுத்தியிருப்பது அமைச்சர் வேலுமணியின் பேச்சு.  இன்று சென்னை மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்காண்டவர், பிறகு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஒருநாள் மழைக்கே சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றதே” என்று கேட்கப்பட்டது. இதனால் ஆத்திரமான வேலுமணி,  “லண்டன், அமெரிக்காவில் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும். லண்டன் மிதக்கும்” என்று கூறினார்..

இதுதான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“மழை பெய்தால், லண்டன் மிதக்குமா? வேலுமணி கூறியது சரிதானா?

நீண்டகால லண்டன்வாசியான ரவி சுந்தரம் அவர்களின் சிறப்புக்கட்டுரை இதோ:

“லண்டனில் மழை பெய்தாலும் நகரம் நீரில் மிதக்கும்”-

அமைச்சர் வேலுமணி ஒரு பேச்சுவாக்கில் சொல்லி சென்ற ஒரு விஷயத்தின் சாரம் இது.  இது சரியா என்றால் இல்லை.

நிச்சயமாக இல்லை.

இது எப்படி என்றால் தமிழகத்தின் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு ஒப்பானது என்பது போன்ற ஒரு காமெடி…

இரண்டுமே தவறு! காவல்துறையை பற்றி இப்ப விட்டுடுவோம்.

மழையை பற்றி பேசுவோம்.

யு.கே. முழுவதிலும் வருடத்தில் 9 மாதங்கள் எங்காவது ஒரு இடத்தில் மழை பெய்து கொண்டுதான் இருக்கும். அப்படி பெய்யாவிட்டால்தான் பிரச்சனை. எனவே இவர்கள் காலம் காலமாக மழையுடன் வாழ பழகிவிட்டனர். லண்டனும் அப்படியே!!

லண்டனில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 210 நாட்கள் மழை பெய்யும் என்று ஒரு தகவல் இருக்கிறது. அத்தனை மழை பெய்தாலும் லண்டன் நகர மக்கள் எப்போதும் மழை நீரில் முழுகியதே இல்லை என்று சொல்லலாம். சரியாக படியுங்கள்.  மழை நீரில் மக்கள் முழுகியதே இல்லை.

இதற்கு காரணம் காலம் காலமாக லண்டன் மற்றும் பெருநகர லண்டனில் அமைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த வடிகால் கால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள். சுமார் 150 வருடங்களுக்கு முன்பே ராணி விக்டோரியா காலத்திலேயே இவர்கள் நகர வளர்ச்சியின் தன்மைகளை புரிந்து கொண்டு அதற்கேப்ப திட்டமிட தொடங்கி விட்டனர்.

லண்டன் நகரம் மாநகரமாக மாறி இன்று பெருநகரமாக பரந்து விரிந்து கிடக்கிறது. இதன் படத்தை பார்த்தால் தேம்ஸ் நதி இந்த நகரத்தின் மையத்தில் ஊடாக ஓடுவதை காணலாம்.

லண்டனுக்கு வெள்ள அபாயம் என்று வந்தால் அது இந்த நதியில் இருந்துதான் வர வேண்டும். 1928ல் ஒரு முறை இந்த நதியின் வெள்ளப் பெருக்கால் வடக்கு லண்டன் மிகவும் பாதிக்கப்பட்டது. அன்று கற்று கொண்ட பாடத்திலிருந்து லண்டன் மேலும் தன் வெள்ளக் கட்டுப்பாட்டை பலப்படுத்தியது. மார்கட் தாச்சர் காலகட்டத்தில் கூட புதிய முறை வெள்ளக் கட்டுப்பாட்டை லண்டனின் முகத்துவாரத்தில் நிறுவினார்கள்.

இது போன்று அவர்கள் தொடர்ந்து லண்டனின் வெள்ளம் மற்றும் மழை நீர் கால்வாய்களை தொடர்ந்து பலப்படுத்தி வந்துள்ளனர்.

உதாரணமாக மத்திய லண்டனின் நீர் வடிகால் பாதாள சாக்கடையின் விட்டம் என்ன தெரியுமா? 10 அடிக்கு மேல்.!! ஒருவர் சர்வ சாதாரணமாக நடந்து போக முடியும். இது முழுவதும் நிரம்பி தண்ணீர் சென்றதாக சரித்திரமே இல்லை. இருந்தாலும் இது தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு

பராமரிக்கப்பட்டு வருகிறது.  இத்தனைக்கும் லண்டனில் பாதாள ரயில்கள் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட 5 மட்டங்களில் குறுக்கு நெடுக்காக கடக்கிறது.

இத்தனை மட்டங்களில் லண்டனுக்கு அடியே கட்டுமானங்கள் இருக்கின்றன.  இரண்டாம் உலக போரில் கூட இவர்களின் பாதாள சாக்கடைகள் பராமரிக்கப் பட்டன. 150 வருடங்களாக லண்டனில் சாக்கடை நீர் தேம்ஸ் நதியில் விடப்படுவதில்லை என்று தெரியுமா ?

லண்டன் மட்டுமல்ல கிராமபுறங்களிலும் இதே நிலைதான்.

சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப் படுவதேயில்லை.

ஒரு நகர வளர்ச்சி என்றால் என்ன என்பதை தெளிவாக அடுத்த 20 ஆண்டுகளுக்கு திட்டமிடுகின்றனர்.

லண்டனில் 150 வருடங்களாக அனுமதியில்லாத கட்டிடங்களே கட்டப் பட்டதில்லை என்று யாருக்காவது தெரியுமா?

ஒரு கட்டிடம் அனுமதி பெற வேண்டுமானால் அந்த கட்டிடத்தினால் சுற்றுசூழலின் பாதிப்பை முக்கியமாக கவனிக்கின்றனர். நடைபாதைகள் மற்றும் தேவையான வாகன நிறுத்தம் இல்லாத வணிக நிறுவனங்கள் கட்டப்படவே அனுமதியில்லை.

ஒரு வீடோ, அலுவலகமோ, வியாபார தலமோ கட்டப்படுமுன் அதில் எத்தனை பேர் உபயோகிப்பார்கள்? எத்தனை நீர் தேவை? எத்தனை கழிவு நீர் வெளியேறும்? எத்தனை மின்சாரம் தேவைப்படும்? எத்தனை காஸ் தேவைப்படும் என்று அனைத்து தேவைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

என் வீடே ஆனாலும் நான் விரிவுபடுத்த இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தே கட்ட முடியும். மாறி கட்டினால் கட்ட தொடங்கி நாளாவது நாளே வந்து இடிப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரன் புகார் தந்த அடுத்த நாள் ஆள் வந்து நிற்பார்கள். கட்டி முடிச்சு 2 வருடம் கழித்து வரமாட்டார்கள்.  இல்லை…அரசியல்வாதி வந்து திறந்து வைத்த பிறகு கையை பிசைய மாட்டார்கள்.

ரவிசுந்தரம்

இப்படி திட்டமிட்டு செயல்பட்டும் பெருநகர லண்டனின் மேற்கு பகுதியில்  சென்ற ஆண்டு தேம்ஸ் நதி பொங்கி ஊருக்குள் புகுந்து சில சேதங்களை

ஏற்படுத்தியது. இந்த பகுதி நகரத்தின் ஒரு மூலையில் என்றாலும் இன்றும் அதற்கான கேள்விகளும் தீர்வுகளும் தேடப்படுகின்றன. இந்த வெள்ளப் பெருக்கு முற்றிலும் எதிர்பாராதது என்று நினைக்கின்றனர்.

கவலை கொள்கின்றனர்.  தொடர்ந்து எழும் மக்கள் தொகை பெருக்கத்தால்  லண்டனுக்கு வெளியே வீடுகள் வெள்ளப் பிடிப்பு பகுதிகளில் கட்ட நேர்வதை கவலையுடன் சரி செய்ய முயல்கின்றனர். இதில் பெரும் போராட்டமே நிகழ்கிறது.

இவர்கள் பத்து ஆண்டுக்கு ஒரு முறை லண்டனையோ அதை சுற்றியோ  வெள்ளத்தை எதிர்ப்பார்த்தாலும் சில ஆண்டுகளாக அடிக்கடி நிகழ்வதை இவர்கள் கவலையுடன் கவனிக்கின்றனர். மீண்டும் ஒரு முறை அது போல் தாம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

நாம் இருக்கும் பள்ளிகரணை போன்ற கழிவேரியை இழக்கிறோம். ஆனால் இங்கிலாந்து வெள்ளப் பெருக்கை எதிர்காலத்தில் தவிர்க்க கடலோர அரிப்பை தவிர்க்க புதிய சதுப்பு நிலத்தை உருவாக்குகின்றனர்.

இப்படி இவர்கள் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏராளம்!!

அது வேற லெவல் சார் !!