மீ டூ போராளிகளே.. “விசாகா”வுக்காக குரல் கொடுப்பீர்களா?

லைப்பைப் பார்த்தவுடன், “விசாகா” என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்த கட்டுரை என்று பலர் நினைக்கக்கூடும்.

ஆனால்…

பாலியல் சீண்டல்களை தடுக்கும் வல்லமை படத்த “விசாகா”வை நாம் பயன்படுத்திக்கொள்லவே இல்லை என்கிற சோகத்தைச் சொல்லும் கட்டுரை இது.

தற்போது ரொம்பவே பிரபலமாகிவிட்ட  மீ டூ ஹேஷ்டேக் இயக்கத்தில் ஆகப்பெரும்பாலோர் தங்கள் பணிச் சூழலில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்களைத்தானே பதிவிட்டு வருகிறார்கள்?

அப்படி பாதிக்கப்படாமல் காக்கும் அமைப்புதான் விசாகா.

“பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்” [the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013] 2103ம் வருடம், இயற்றப்பட்டது.

இதன்படி, பத்து பேருக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டியது கட்டாயம். பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் ஊழியர்கள் இக்கமிட்டியில் முறையிடலாம்.

இந்த விசாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என்பது விதி. கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் அளிக்க வேண்டும்.

எது எதெல்லாம் பாலியல் சீண்டல் என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது,

அவரை பாலியல் உறவுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது,

பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்கள் மீது என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

தினக்கூலி பெண் பணியாளர்களும் புகார் தர ஏதுவாக  ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், ‛விசாகா குழு” அமைக்க வேண்டும்.

ஆனால் இன்னும் இந்த விசாகா குழு அமைக்கப்படவில்லை என்பதுதான் சோகம். இக்குழு முறையாக எல்லா பணியிடங்களிலும் அமைக்கப்பட்டாலே பாலியல் சீண்டல் ஆகப்பெரும்பாலும் குறைந்து விடும்.

தற்போது பாலியல் சீண்டலுக்கு எதிராக மீ டூ என்று போராடும் போராளிகளே.. மீ டூ என்பதோடு “வீ வாண்ட் விசாகா”(we want visaka) என்கிற ஹேஷ் டேக்கையும் இணைத்து பரப்புங்கள். நிஜமான தீர்வு கிடைக்கும்!