லண்டன்: வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் அணி ஏதேனும் அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழல் நிலவி வருகிறது.

தற்போதுவரை 9 புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணி எப்படியும் இந்தியாவிடம் தோற்கும், இல்லையென்றால் நியூசிலாந்து அணியிடமாவது தோற்கும். எனவே, நாம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வங்கதேச அணியை வென்று 11 புள்ளிகளைப் பெற்று, இங்கிலாந்தை முந்திச் சென்று அரையிறுதியில் நுழைந்துவிடலாம் என்று பெரியளவில் ஆசைப்பட்டனர்.

ஆனால் பாவம்! இங்கிலாந்து அணி சொல்லிவைத்தாற்போல் 2 போட்டிகளையுமே வென்று 12 புள்ளிகளுடன் அரையிறுதியில் நியூசிலாந்தை முந்திக்கொண்டு நுழைந்துவிட்டது. தற்போது, பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்று 11 புள்ளிகளைப் பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முன்னணியில் இருக்கிறது.

எனவே, சற்று வலுவான வங்கதேசத்தை குண்டக்க மண்டக்க ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அதாவது, 311 ரன்கள் அல்லது 316 ரன்கள் வித்தியாசத்தில். அதற்கு முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வேண்டும்.

சரி, அப்படியே பேட்டிங் செய்தாலும் இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? சாதாரண ஒரு சொத்தை அணியைக்கூட அப்படி வெல்வது மிகவும் கடினம். அனால், வங்கதேசத்தை அப்படியெல்லாம் வென்றுவிட முடியுமா? முதலில் வங்கதேசத்தை பாகிஸ்தான் சாதாரண முறையிலேனும் வெல்கிறதா? என்று பார்ப்போம். ஜுலை 5ம் தேதி இரு அணிகளும் மோதும் போட்டி நடைபெறவுள்ளது.

கடைசியில், பாகிஸ்தானின் கதை இப்படி அடுத்தவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு ஆளானதுதான் சோகம்!