புதுடெல்லி: தற்போது நடைமுறையில் இருப்பதைவிட, மொபைல் ஃபோன் சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு வரை அதிகரிக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து அந்தந்த சேவை வழங்கும் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் போட்டி காரணமாக, கட்டணங்களை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு தலையிட வேண்டும் என்று தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதுகுறித்து பரிசீலித்த நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், “தொலைபேசி அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டாக்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள், குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, மொபைல் சேவை கட்டணங்கள் தற்போதைய விலையைவிட, சுமார் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.