சென்னை:

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வருகையை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், பேனர் இல்லாவிட்டால் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? என்று கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,  மோடி யோக்கியமானவராக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என ஆவேசமாக கூறினார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு காரணமாக  தமிழகத்தில் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், நீதிமன்ற உத்தரைவை மீறி பேனர் வைக்கப்பட்டதில் சமீபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்தார்.

இதையடுத்து தமிகத்தில் பேனருக்கு எதிரான குரல் அதிகரித்த நிலையில், பேனர் வைக்க தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகஅரசு சார்பில், மோடி, ஜின்பிங் சந்திப்புக்கு வரவேற்று பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை நடைபெற்ற ஃபுட்டெக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, புதிய புட்டெக்ஸ் ஆப்-ஐ  அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,

“தமிழ்நாட்டின் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கின்ற வேளையில், மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமருக்கு 14-விளம்பர பலகைகள் வைக்க வேண்டுமென தகுதி இல்லாத  அதிகாரி மனு கொடுத்துள்ளார்.

அந்த மனு விசாரணையின் போது நான் கோர்ட்டில் இல்லை. அதனால் இன்று இந்த வழக்கை சந்திக்க இருக்கிறேன். சட்ட விரோதமாக பேனர் வைக்கிறதே தப்பு.. பேனர் விளம்பரம் இல்லாமல் பிரதமர் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? மகாபலிபுரத்தில், மோடி வருகையையொட்டி மாவட்ட கலெக்டர், அந்த பகுதியில் உள்ள ஏழை மக்களை விரட்டி மோடிக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். மானங்கெட்ட இந்த அரசாங்கம் தானாக பதவி விலக வேண்டும் இல்லையென்றால் பொதுமக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள்.

வரும் 25-ஆம் தேதி வரை பேனர் வைக்க தடை இருப்பதை அறிந்தும் அதை பொறுக்க முடியாதா?

மோடி யோக்கியமாக இருந்தால்.. மக்களை மதிப்பதாக இருந்தால்.. பேனர் வைத்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது. எடப்பாடி பழனிச்சாமி வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் கோர்ட்டில் அசிங்கபடுத்தி விடுவேன். பேனர் காரணமாக ஏராளமான பலிகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போதுதான்  பேனர் கலாச்சாரம் ஒரு முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில்  தமிழக அரசு இத்தகைய செயலை செய்வது மனசாட்சிக்கு விரோதமானது.

இவ்வாறு அவர் கூறினார்.