ஹாங்காங்: இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டுள்ளதாகவும், இந்த இக்கட்டை பிரதமர் அலுவலகம் மட்டுமே சமாளித்துவிட முடியாதென்றும் கூறியுள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா தொடர்பான இன்றைய சூழலால், இந்தியப் பொருளாதாரம் மோசமான இக்கட்டை நோக்கிச் செல்கிறது. எனவே, இந்த இக்கட்டைப் பிரதமர் அலுவலகம் மட்டுமே தீர்வுகண்டு தீர்த்துவிட முடியாது.
எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து, அவர்கள் தரப்பிலிருந்து வரும் சரியான யோசனைகளுக்கும் செவிமடுக்க வேண்டும். அனைத்து தடங்கல்களிலிருந்தும் நாம் வெளிவர வேண்டும். இல்லையெனில் நிலைமை மோசமாகிவிடும்.
அரசியல் வேறுபாடுகள் இந்த நேரத்தில் மறக்கப்பட வேண்டும். இந்தப் பாதிப்பானது வெறுமனே கொரோனா வைரஸால் நிகழ்ந்தது மட்டுமல்ல. கடந்த 3-4 ஆண்டுகளாக ஏற்பட்ட பாதிப்புகளை மற்றும் அதன் பின்விளைவுகளை சரிசெய்ய வேண்டியுள்ளது.
நாட்டில் நிறைய திறமையானவர்கள் உள்ளனவர். அவர்களைப் பயன்படுத்த இந்த அரசு தயங்கக்கூடாது. பாரதீய ஜனதாவிலேயே முன்னாள் நிதியமைச்சராக இருந்த ஒருவர்(யஷ்வந்த் சின்கா) உள்ளார். இந்த நேரத்திலும், அரசியல் வேறுபாடுகளை கடைப்பிடிப்பது வருத்தத்திற்குரியது” என்றார்.