மும்பை: கொரோனாவால் மும்பை மாநகரம் பெருமளவு பாதிக்கப்பட்டதால் பாதுகாப்புப் பணிகளுக்காக அந்நகரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.
இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 694 பேர் பலியாகி உள்ளனர்.
மராட்டியத் தலைநகர் மும்பையில் அதிக பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு சமூக பரவலாக கொரோனா மாறியிருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்திடம் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே மறுத்தார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், “மாநில காவல்துறையினர் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் சோர்வடைகின்றனர், சிலர் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வைரஸ் தொற்றால் உயிரிழக்கவும் நேரிட்டது. எனவே, காவல்துறையினருக்கு ஓய்வு தேவை.
இதனையடுத்து மும்பை நகரப் பாதுகாப்புக்கு தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை கேட்கலாம். இதற்காக, மும்பை மாநகரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்றெல்லாம் அர்த்தம் இல்லை. அப்படி ஒருபோதும் ஒப்படைக்கப்படாது” என்றார்.