லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது.

இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனைக்கூட கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 28ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, அந்நாட்டில் ராணுவ ஆட்சி‍யைக் கொண்டு வந்தார் முஷரப். இந்தியாவுடன் கார்கில் போர் நடைபெற்றபோது, பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்தவர் இவர்தான்.

பின்னர், 2001ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2008ம் ஆண்டுவரை பதவியில் இருந்தார். அப்போது சட்டவிரோதமாக நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தினார் என்று பின்னாளில் இவரின் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது.

இதன் விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், தீர்ப்பு, வரும் 28ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த அவசரநிலை காலத்தில், அந்நாட்டு நீதித்துறை கடுமையான சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையில் முஷரப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக மரணதண்டனைக் கூட விதிக்கப்படலாம். அவர் தற்போது யூஏஇ நாட்டில் தங்கி, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர், முன்னாள் ராணுவ தளபதி என்பதால், மரண தண்டனை வழங்கும் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.