துரோகம் செய்த எம்எல்ஏக்கள் ஒருநாளும் காங்கிரசுக்கு திரும்ப முடியாது: சித்தராமையா

பெங்களூரு: காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள், வானம் இடிந்து விழுந்தாலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், ஒரு காலத்திலும் கட்சிக்குள் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் சித்தராமையா.

அவர் கூறியுள்ளதாவது; நான் காங்கிரசிலிருந்து பாரதீய ஜனதாவுக்கு சென்ற பல தலைவர்களைப் பார்த்துள்ளேன். ஆனால், அவர்களில் பலரும் அந்தக் கட்சியில் அதிக காலம் நீடிக்க முடிந்ததில்லை. ஏனெனில், சிந்தாந்த வேறுபாடு அப்படியானது. ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவர்களால் மட்டுமே பாரதீய ஜனதாவில் நிலைத்திருக்க முடியும். எனவே, பலபேர் திரும்பவும் காங்கிரசுக்கே திரும்பியுள்ளார்கள்.

பாரதீய ஜனதாவின் பேச்சைக் கேட்டு ராஜினாமா செய்த 16 பேருக்கும், அக்கட்சி, அரசியல் முடிவுரையை எழுதிக் கொண்டுள்ளது. பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தங்களுக்கான சவக்குழியை தாங்களே தோண்டிக் கொண்டுள்ளார்கள் அவர்கள்.

மந்திரிப் பதவி மற்றும் பண உத்தரவாதம் ஆகியவற்றை நம்பி அவர்கள் கட்சி மாறிவிட்டார்கள். ஏமாற்று வலையில் சிக்கி விட்டார்கள். 12 பேருக்கு மந்திரிப் பதவி உத்தரவாதமும், 8 பேருக்கு பண உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது. எப்படி அத்தனை பேரால் அமைச்சரவையில் இடம்பெற முடியும்? பாரதீய ஜனதாவில் எப்படி விட்டுக்கொடுப்பார்கள்? இது ஒரு ஏமாற்று வேலையே” என்றார் சித்தராமையா.