புதிய நாடாளுமன்ற வளாகம் முக்கோண வடிவில் அமையவுள்ளதா?

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சக அலுவலக கட்டடங்களை புதிதாக கட்டுவது தொடர்பான மோடி அரசின் திட்டத்தின்படி, புதிதாக கட்டப்படவுள்ள நாடாளுமன்ற வளாகம் முக்கோண வடிவில் அமையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற கட்டடம் மற்றும் பிற அலுவலக கட்டடங்கள் எதிர்காலப் பயன்பாட்டிற்கு போதாது என்று கூறும் மோடி அரசு, தற்போது இருக்கும் கட்டடங்கள் எதையும் இடிக்காமல், அவற்றை அருங்காட்சியகமாய் மாற்றிவிட்டு, புதிதாக கட்டடங்களைக் கட்டுவதற்கான வடிவமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலேயே பிரதமருக்கான இல்லமும் அமையவுள்ளதாம். மேலும், இந்தப் புதிய நிர்வாக வளாகங்கள் யமுனை நதிக்கரை வரை நீட்டிக்கப்படுமாம்.

இந்த வளாகத்தில் இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில் 3 பெரிய தூண்கள் இடம்பெறவுள்ளன. மேலும், ராஷ்டிரபதி பவனிலிருந்து ராஜ்பாத் வரையிலான பகுதியில் பெரிய தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் தற்போது இருக்கும் மைய மண்டபத்திற்கு பதிலாக, புதிய பெரிய அரங்கு கட்டப்படும். அனைத்துப் பணிகளும் வரும் 2024ம் ஆண்டுக்குள் (ஆட்சியின் காலம் முடிவதற்குள்) கட்டி முடிக்கப்படுமாம். நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், வரும் 2022ம் ஆண்டே புதியக் கட்டடத்தில் நாடாளுமன்றம் செயல்படத் துவங்கும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.