டில்லி

சாம் மாநிலத்தில் உள்ள வெளிநாட்டினர் முகாமில் இருந்து இஸ்லாமியர் அல்லாதோரை வெளியேற்றுமாறு அம்மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நித்யானந்த் ராய்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.   அதில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன.   அந்த மக்கள் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டனர்.  இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அவர்கள் தக்க ஆவணங்களை அளித்தால் குடியுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.    அவர்களைத் தங்க வைக்க மாநிலத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டன.

தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தொடர் கூட்டத்தில் அசாம் மாநில காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் அப்துல் கலீக், “அசாம் முகாம்களில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், கிறித்துவர்கள் மற்றும் சமணர்கள் விடுவிக்கப்படுவார்களா?” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “இது போல ஒரு முகாம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு எவ்வித உத்தரவும் அளிக்கவில்லை.  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டதால்  இவர்கள் தங்கத் தனி இடம் அமைக்கப்பட்டது.  தற்போது குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் அமலாக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2014 ஆம் வருடம் டிசம்பர் 31க்கு முன்பு இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், கிறித்துவர்கள் மற்றும் சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கலாம்.   எனவே இவர்களை வெளிநாட்டினர் எனக் கருத முடியாது என்பதால் இவர்களை இந்த முகாம்களில் இருந்து விடுவிக்குமாறு அசாம் மாநிலத்துக்கு மத்திய அரசு அறிவுரை அளித்துள்ளது.

அது மட்டுமின்றி கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி இந்த முகாம்களில் மூன்றாண்டுகளுக்கு மேல் தங்கி உள்ளவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் விடுவிக்கப்பட வேண்டும்.  மேலும் இவர்களில் பலர் குடிமக்கள் பதிவேட்டுக்கு மேல் முறையீடு செய்துள்ளனர்.   இந்த வழக்குகள் விரைவில் தீர்க்கப்படும்.   அதுவரை இவர்களை வெளிநாட்டவர் என அறிவிக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.