கேரளா இளைஞர் காங்கிரசார் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல்காந்தி சூளுரை

காசர்கோடு:

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல்காந்தி சூளுரைத்துள்ளார்.

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொலையாளிகை கண்டுபிடித்து, தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்த படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓய்வு கிடையாது என்று தெரிவித்து உள்ளார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, க்ரிபேஷ் என்ற 24 வயது வாலிவரும், சரத்லால் என்ற 29 வயது வாலிபரும் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.  டூவீலரில் இருவரும் சென்றபோது காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல், சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.

இவர்களை கொலை செய்தது மாநிலத்தை ஆட்சி செய்து வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமச்சந்திரன், பினராயி விஜயன், தனது ஆட்களிடம் ஆயுதங்க ளை கீழே போடச் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் கேரளாவில், அமைதி திரும்பும்.

எங்கள் கட்சியின் இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று  குற்றம்சாட்டினார்.

இக்கொலையை கண்டித்து இன்று  கேரளாவில்  பந்த் நடத்த காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. இதையடுத்து தமிழக பஸ்கள், போடிமெட்டு, களியாக்கவிளை போன்ற, எல்லைப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.