கான்பெரா: ஜனவரி 13ம் தேதி அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனின் பயணம் ரத்துசெய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கூறப்படுவதாவது; ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸனுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி. எனவே, அந்த அழைப்பை ஏற்று ஜனவரி 13 முதல் 16ம் தேதிவரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிருந்தார் ஆஸி., பிரதமர்.

ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது மற்றும் உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த காட்டுத்தீயால் பெரியளவிலான வனப்பகுதியும் எரிந்து சாம்பலானதோடு, வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு அவசர நிலைப் பிரகடனமே செய்யப்பட்டுள்ளது.

நிலைமை அங்கு இவ்வாறிருக்கையில், ஆஸ்திரேலியப் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்தாவது உறுதி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.