ராஞ்சி: ராஞ்சியில் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனை, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டிருப்பதால், லாலுவுக்கு பரோல் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கால்நடை தீவன வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை அடுத்து, சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் லாலு பிரசாத். மோடி அரசின் கைங்கர்யத்தால், பல முறை பரோலுக்கு முயற்சித்தும், அவருக்கு கிடைக்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், லாலு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருப்பதால், “அவரை பரோலில் அனுப்புவது குறித்து, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனைக் கேட்கப்பட்டுள்ளது” என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

லாலுவின் மகனும், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி கூறுகையில், “ராஞ்சி மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 72 வயதான என் தந்தையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவருக்கு ஜார்க்கண்ட் அரசு உடனடியாக பரோல் வழங்க வேண்டும்” என்றார்.