சென்னை:

மிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைவான அளவில் மாணவர்கள் படித்து வரும் பள்ளிகள் குறித்த விவரங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது.

இதன் காரணமாக, மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  அரசு தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் குறித்த பட்டியல்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 24 ஆயிரத்து 321 அரசு தொடக்கப் பள்ளிகள், 5025 அரசு உதவி பெறும் பள்ளிகள்,  6303 சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 649 என ஆரம்ப கல்வி கற்பிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல, அரசு நடுநிலைப் பள்ளி 6966, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் 1513, சுயநிதி நடுநிலைப் பள்ளிகள் 1001, என மொத்தம் 9480 செயல்படுகின்றன. இவற்றில் தனியார் சுயநிதி பள்ளிகள் நீங்கலாக மற்ற பள்ளிகள் அனைத்தும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர்.

மேற்கண்ட பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை புதியதாக தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்த நியமிக்கப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளின் அபரீத வளர்ச்சி காரணமாக பல பகுதிகளில் அரசு பள்ளிகளில் குறைவான மாணவ மாணவிகளே படித்து வருகின்றனர். இதன் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர் களின் பணி நேரம் வீணடிக்கப்படுகிறது. இதன் காரணமாக, குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் குறைவாக படிக்கின்ற பள்ளிகளை குறித்த பட்டியல்களை தயாரிக்க தொடக்க கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதில்,  10 மாணவர்களுக்கு குறைவாக படிக்கும் பள்ளிகள் விவரம் விரைவில் தொடக்க கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அருகில் உள்ள பள்ளிகள் விவரம், இரு பள்ளிகளுக்கும் இடையில் தூர விவரம், இந்த பள்ளியில் உள்ள மாணவர்களை அருகாமை பள்ளிக்கு மாற்ற உள்ள வசதி, அதனால் ஏற்படும் சிரமங்கள்,( ஆறு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டி இருந்தால் அதன் விவரம்) தெரிவிக்க வேண்டும்.

2019-2020ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறு பணிக்கால நியமனம் ஆணைகள் வழங்க கூடாது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எவராவது மகப்பேறு விடுப்பில் சென்றால் அந்த பணியிடத்துக்கு பதில் ஆசிரியர்கள் நியமிக்க கூடாது.

மேற்படி பணியிடத்தில் பணிபுரிய நிர்வாகத்துக்கு உட்பட்ட, ஒன்றியத்தில் உள்ள பிற நிர்வாகத்தில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் என மொத்தம் 1848 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தி பரவியதை அடுத்து தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பள்ளிகளை மூடக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.