மும்பை: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை, அணியிலிருந்து விடுவிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 2021ம் ஆண்டின் ஐபிஎல் ஏலம் துவங்குவதற்கு முன்பாகவே இதுதொடர்பான முடிவை அந்த அணி நிர்வாகம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் ஸ்டீவ் ஸ்மித். அவரை பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால், அவரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது.

கடைசியாக நடந்து முடிந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், அணியின் கேப்டனாக ஸ்மித்தின் செயல்பாடு மிக மோசம். புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது அந்த அணி.

இத்தொடரில், மொத்தம் 14 ஆட்டங்களை ஆடிய ஸ்டீவ் ஸ்மித், மொத்தமாக எடுத்தது 311 ரன்கள் மட்டுமே. அதில், 3 அரைசதங்கள் அடக்கம். இத்தொடரில், அவர் அடிக்கடி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட அணி நிர்வாகம், அவரை வரும் ஐபிஎல் தொடருக்குள், அணியிலிருந்து கழற்றிவிட யோசித்து வருகிறது. முந்தைய காலங்களில், இதே ஸ்டீவ் ஸ்மித்தை பெரியளவில் ஆதரித்து வந்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.