சென்னை:

காவிரி நீர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்ல இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அவரது வீட்டு முன் செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.

காத்திருக்கும் செய்தியாளர்கள்..

காவிரி சர்ச்சை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. ஏற்கெனவே தமிழகத்துக்கு என்று நடுவர் மன்றம் ஒதுக்கிய நீரின் அளவில் தற்போது 14.75 டி.எம். சி. தண்ணீர் குறைக்கப்பட்டு உத்தவு வெளியாகி உள்ளது. இந்த நீர், கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் வீடு

இந்த நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் நடிகர் கமல்ஹாசனும் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதே போல கட்சி துவங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தும் கருத்து தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, காவிரி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ரஜினி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று ஒரு தகவல் பரவியது. இதையடுத்து அவரது போயஸ் இல்லத்தின் எதிரில் ஊடகத்தினர் குவிந்துள்ளனர். ஆனால் ரஜினியின் வீட்டுக்கதவு அடைக்கப்பட்டே இருக்கிறது.

மேலும், “செய்தியாளர்களை ரஜினி சந்திப்பார்” என்றோ, “சந்திக்க மாட்டார்” என்றோ அவரது தரப்பில் இருந்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.