புதுடெல்லி: வரும் லோக்சபா தேர்தலில், கட்சியின் சில ராஜ்யசபா உறுப்பினர்களுக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், பாரதீய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏனெனில், அப்போதுதான் இழந்த உறுப்பினர்களை எளிதாக திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ராஜ்யசபா உறுப்பினர்களுள், சில மத்திய அமைச்சர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தற்போது கட்சிக்கு எதிர்ப்பாக உள்ள சத்ருகன் சின்ஹா உறுப்பினராக உள்ள பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

ஏனெனில், இத்தொகுதியில் கயஸ்தா வாக்காளர்கள் அதிகம். கடந்த தேர்தலிலேயே அவர் இத்தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று பேச்சு உலவியது என்பதும் நினைவுகூறத்தக்கது.

இதுதவிர, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, இந்தமுறை மீண்டும் அமேதி தொகுதியிலேயே, ராகுல்காந்தியை எதிர்த்து களமிறக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

– மதுரை மாயாண்டி