சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலையை காரணம் காட்டி தாமதப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளை  ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  எனது தொகுதியில் நடைபெறும் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பதை பார்வையிட்டேன். பணிகளை வேகப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளிடம் விவாதித்தேன் என்றார்.

மேலும், வில்லிவாக்கத்தில் ரெயில்வே மேம்பால பணியை  விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்ட தாகவும்,  ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் காலனியில் உயர் அழுத்த மின்கம்பியை புதைவிட கேபிளாக பதிக்கும்பணி முடிந்ததையும் பார்வையிட்டேன். மேலும் மாநகராட்சி பணிகளையும் பார்வையிட்டேன் என்றார்.

ஜிகேம் காலனியில் உள்ள  மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க நிதி ஒதுக்கி இருந்தேன். அந்த பணி முடிந்ததால் அதையும் தொடங்கி வைத்ததாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். மாநகராட்சி பணிகளின் செயல்பாடு திருப்தியாக உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின்,  ஏறக்குறைய 1 வருடமாக மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் இல்லை. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்காதது வேதனைக்குரியது.

இந்த ஆட்சியில் 2 முறை மழை வெள்ள புயலால் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை அனைவரும் அறிவார்கள். அதுபோன்ற சூழல் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினரிடம், பொதுநல அமைப்பினரும், முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நான் அறிக்கை விட்டிருக்கிறேன் என்றார்.

மற்றொரு செய்தியாளர்கள் இரட்டை இலை குறித்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு என தெரிந்த பிறகுதான் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே என்று கேட்டதற்கு,

அப்படி அவர் சொன்னதாக தெரியவில்லை. அது போல் கூறமுடியாது. அவ்வாறு கூறி இருந்தால் அது ஜனநாயக படுகொலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என தெரிந்த பிறகு தேர்தலை நடத்த உத்தர விட்டால் அது சர்வாதிகார செயலாகும் என்றார்.

மேலும்,  ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஏன் தேர்தல் நிறுத்தப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், அங்கு ரூ.89 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணத்தை வருமான வரிதுறையினர் குட்கா பாஸ்கர் மன்னிக்கனும் டெங்கு பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றினார்கள். அந்த ஆவணத்தை எடுத்த பிறகு தான் அதை மையமாக வைத்து இடைத்தேர்தலை நிறுத்தினார்கள்.

ஆனால்,  அதற்கு வழக்கு உண்டா? எப்.ஐ.ஆர். உண்டா? ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? இந்த சம்பவத்திற்கு முறையாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தி.மு.க. மட்டுமல்ல எல்லோரும் கேட்கிறார்கள் என்றார்.

காசிமேடு மீனவர்கள் மீதான தடியடிக்கு தி.மு.க. சதிதான் காரணம் என்று அமைச்சர் கூறியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த ஸ்டாலின்,  ஜெயக்குமார் சூப்பர் முதல்-அமைச்சர் அல்ல. டூப்பர் முதல்-அமைச்சர் ஆக உள்ளார். அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.