சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து,  தமிழகஅரசு இன்று பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்துகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு நவம்பர் இறுதிவரை  அமலில் உள்ளது. தற்போது  பல்வேறு  தளர்வுகளும் அறிவித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.  இதையடுத்து,  வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

 அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், வேலைவாய்ப்பின்றி உள்ள ஏராளமான ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கடநத 6 மாதங்களாக பள்ளிகள் திறக்காமல் இருபபதால், மாணாக்கர்களின் கவனம் சிதறுவதாகவும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி,  பெற்றோரிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம்  இன்று ( 9-ந் தேதி) நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  9-12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நவ-9ந் தேதி அன்று காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாதோர் கடிதம் வாயிலாக கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.