15ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் அறிவிப்பார் என எப்போதும்போல குழப்பிய கல்வி அமைச்சர்…

--

சென்னை:  தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கு நேரடியாக பதில் தெரிவிக்காமல், முதல்வர் அறிவிப்பார் என்று கூறி, முடிவு கூறாமல் எப்போதும் போல மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன.  அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகிறது. தமிழகஅரசு தொலைக்காட்சி மூலம் கல்வி போதித்து வருகிறது. இந்த முறையிலான கல்வியால், மாணாக்கர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவாக கேட்க முடிவதில்லை என்றும், பல பாடங்கள் புரியவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

முன்னதாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று அரசு கூறி யிருந்தது. கட்டாயம் கிடையாது என்ற போதிலும் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்தியஅரசும்,  வரும் 15ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதுடன், பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து,  தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பொதுமக்களும், மாணாக்கர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மற்றும்  முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் என கூறியவர், பள்ளிகள் திறப்பதற்கு இது சரியான நேரம் கிடையாது. மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை என்றும், அரசு பள்ளிகளுக்கு வர உத்தரவிடுமோ  என்ற ஒரு பதட்டமான நிலையில் தான் அவர்கள் உள்ளனர்.  இதனால்,  பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு கண்பரிசோதனை செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும்,  அரசு சார்பாக தொலைக்காட்சிகளில் எடுக்கும் பாடங்களையொட்டியே பொதுத்தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், தனியார் பள்ளிகளிலிருந்து 2.5 லட்சம் மாணவர்கள் அரசுபள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மூலம் 300க்கும் அதிகமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம்  பாடங்களை நடத்தி பருவத் தேர்வுகளையே நடத்தி முடித்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்கள் மாணாக்கர்களுக்கு புரியவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அது தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ள நிலையில், சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூட மாணாக்கர்கள் பள்ளிக்கு வர தமிழகஅரசு அனுமதி மறுத்து வருகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்த்து இருந்து வருகின்றனர்.

ஆனால், கல்வி அமைச்சர் கொரோனாவை காரணம் காட்டி, பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி,  குழப்பி வருவது தொடர் கதையாகி வருகிறது. இன்று ஏதாவது நல்ல முடிவை அறிவிப்பார் என பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதல்வர்தான் இது தொடர்பாக முடிவு செய்து அறிவிப்பார் என்று கூறி உள்ளார். இது பெற்றோர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.