புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான ஸீரம் இன்ஸ்டிட்யூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் டெவலப் செய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்து உற்பத்தியை, அடுத்த 2 முதல் 3 வாரங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேசமயம், அந்த தடுப்பு மருந்து, மனிதர்களுக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டால் மட்டுமே, இந்த உற்பத்தி நடவடிக்கை தொடங்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புனேவில் அமைந்த ஸீரம் இன்ஸ்டிட்யூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. உலகளவில், அந்தப் பல்கலைக்கழகத்துடன் இத்தகைய ஒத்துழைப்பை மேற்கொண்ட 7 நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு பல்கலையின் டாக்டர்.ஹில்லுடன் தங்களின் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், அடுத்த 2 முதல் 3 வாரங்களில் உற்பத்தியைத் தொடங்குவதை எதிர்பார்ப்பதாகவும், முதல் 6 மாதங்கள் வரை, ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் டோஸ்கள் வீதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பிறகு, ஒரு மாதத்திற்கு 10 மில்லியன் டோஸ்கள் வரை, ஒவ்வொரு மாதமும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ஸீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை நிர்வாக இயக்குநர் அதார் பூனவல்லா.