மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ளூர் ரயில்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் தொடர்ந்தால் ரயில் சேவைகளை நிறுத்தும் நிலைக்கு மாநில அரசு தள்ளப்படலாம் என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாங்கள் உள்ளூர் ரயில்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

ரயில் நிலையங்களில் தற்போதைய நிலைமையை சோதித்து வருகிறோம். நிலையங்களில் அதிக மக்கள் கூட்டம் தொடர்ந்தால், பொது நலனுக்காக உள்ளூர் ரயில்களை மூட வேண்டும்.

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் மக்கள் கூட அடையாள அட்டைகளை காட்டிய பின்னர் உள்ளூர் ரயில்களையும் பேருந்துகளையும் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அமைப்பைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் குறையவில்லை என்றால், நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மும்பையில் 10 பேருக்கும், புனேவில் ஒருவருக்கும் கொரோனா பரவி இருக்கிறது. மொத்தமுள்ள 11 பேரில், எட்டு பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள், மூன்று பேர் உள்ளூர்வாசிகள்.

கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்த தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். அவர்களும் சோதனைகளை நடத்த சரியான விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட வேண்டும். மத்திய அரசிடம் இது தொடர்பாக பேச இருக்கிறோம் என்றார்.