சித்தார்த் உள்பட 600 பேர் மீது, 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,மாணவர்கள் டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது குடியுரிமைத் திருத்த சட்டத்தை திரும்பபெற்று, டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதிருமாவளவன், சித்தார்த் உள்பட 600 பேர் மீது, 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.