நடிகர் சிவாஜி கணேசனுக்கு மீண்டும் மெரினாவில் சிலை? அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை:

மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தால் அதுகுறித்து அரசு  பரிசீலிக்கும் என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

டிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக  முதன்முறையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்துக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி குடும்பத்தினர் உள்பட திரையுலகை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மரியாதை  செய்தனர்..

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, சிவாஜி சிலைக்கு மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து பெருமை சேர்த்தது அ.தி.மு.க. அரசு என்று கூறியவர்,  கோர்ட்டு உத்தரவுப்படியே  மெரினா கடற்கரை பகுதியில்  இருந்து  சிவாஜி கணேசனின் சிலை அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது என்று கூறினார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்ததாலேயே கோர்ட்டு அதை அகற்ற உத்தரவிட்டதாக கூறிய அமைச்சசர்,  மெரினாவில் இருந்து சிவாஜி சிலை  அகற்றப் பட்டதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

மெரினா கடற்கரையில் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு வேறு சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜி குடும்பத்தினர்,  பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்தால் அது குறித்து அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்டது  சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு கூறும்போது,  சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தரப்பில் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர் என்று கூறினார்.

பல்வேறு சர்சைசைகளுக்கிடையே கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த சிவாஜி சிலை உயர்நீதி மன்ற உத்தர வின்பேரில் அங்கிருந்து அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்திற்குள் வைக்கப்பட்டது. அரசு நினைத்திருந்தால் அப்போது  மெரினா கடற்கரையில் வேறு இடத்தில் சிவாஜி சிலையை வைத்திருக்கலாம்… ஆனால், அதை மறுத்த அதிமுக அரசு. தற்போது மக்கள் விரும்பினால் மெரினாவில் புதிய சிலை வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.