கொல்கத்தா :

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களில் சுவேந்து அதிகாரியும் ஒருவர்.

முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய சகாவான இவர், அமைச்சராகவும் இருந்தார்.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள சுவேந்து அதிகாரி, மம்தாவை தேர்தலில் வீழ்த்தியே தீருவது என சபதம் எடுத்து, மாநிலம் முழுக்க சுற்றி வருகிறார்.

கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் கொந்தாய் என்ற இடத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நானும், திலீப் கோஷும் (மாநில பா.ஜ.க. தலைவர்) இங்கே வந்துள்ளோம். இங்கே, திரினாமூல் காங்கிரஸ் காரர்கள் யாராவது இருந்தால் ஓடி விடுங்கள்” என எச்சரித்தார்.

“இது சாதாரண புயல் தான். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சுனாமி அலை எழும்” என கூறிய சுவேந்து அதிகாரி “மே.வங்காள மாநிலத்தில் தாமரையை மலரச் செய்யும் வரை தூங்க மாட்டேன்” என சூளுரைத்தார்.

“இந்த மாநில மக்கள் திரினாமூல் காங்கிரஸ் அரசாங்கத்தை வேரோடு பிடுங்கி எறிய தயாராகி விட்டார்கள்” என சுவேந்து அதிகாரி மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி