கொச்சின்: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வருவதையடுத்து, அவர் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது என்றுள்ளார் கேரள அணியின் பயிற்சியாளர் யோஹண்ணன்.

கேரளாவைச் ‍சேர்ந்த 37 வயதாகும் ஸ்ரீசாந்திற்கு, ‍ஐபிஎல் தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங் குற்றத்திற்கு ஈடுபட்டதற்காக, கடந்த 2013ம் ஆண்டில், 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த நீண்ட தடை, இந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

ஸ்ரீசாந்த், 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தவர். இந்தியாவிற்காக இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

தடை முடிவடைவதையடுத்து, இவர் ரஞ்சிப் போட்டிகளில் கேரள அணிக்கா பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கேரள அணி பயிற்சியாளர் யோஹண்ணன் கூறியதாவது, “ஸ்ரீசாந்த் மீண்டும் கேரள அணிக்காக ஆடினால் மகிழ்ச்சி. இதனை ரசிகர்களும் விரும்புகின்றனர். இவரின் திறமை என்ன என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். எனவே, உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில், இவர் தேர்வுசெய்யப்படுவார். தற்போது இவர் அதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்” என்றுள்ளார் யோஹண்ணன்.