அமீரக நாட்டிற்கு இடம்பெயருமா 2021 உலகக்கோப்பை டி-20 தொடர்?

மும்பை: இந்தியாவில் கொரோனா சூழல் மிகவும் மோசமடைந்திருப்பதால், இந்தாண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடரை, அமீரக நாட்டிற்கு மாற்றுவது குறித்து, பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டித் தொடரில், மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இப்போட்டி, அக்டோபர் தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

“டி-20 உலகக்கோப்பை தொடரை நடைபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் மேற்கொண்டு வருகிறோம். போட்டி நடைபெறுவதற்கான தொடர்பான வழக்கமான சூழல், கொரோனா சூழல் மற்றும் மோசமான சூழல் ஆகிய அனைத்து குறித்தும் கருத்தில்கொண்டு ஐசிசி அமைப்புடன் கலந்துரையாடி வருகிறோம்” என்றார் உலகக்கோப்பை தொடரின் இயக்குநர் திராஜ் மல்கோத்ரா.

இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டித் தொடரை நடத்துவதற்காக, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இதில், அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.