காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழ் திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சென்னை:

பிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகள் போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழ்த்திரைப்பட வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்படுமா? என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை கண்டித்து, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டியையும் வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி போராட்டம் வெடித்தது. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, ஐபில் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையுலகில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக  புதிய தமிழ்ப்படங்கள் வெளியிடப்படாத நிலையில், நேற்று அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு  பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக புதிய படங்கள் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் இந்த டுவிட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.