சென்ன‍ை: ஆந்திர அரசின் 3 தலைநகர திட்டத்திற்கு, அம்மாநில ஆளுநர் பிஸ்வா புஸான் ஹரிச்சந்தன் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, தமிழகத்திலும் இரண்டாம் தலைநகரம் அமைப்பது குறித்து விவாதங்கள் மீண்டும் புறப்பட்டுள்ளன.

கடந்த 1983ம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், தலைநகரத்தை, மாநிலத்தின் மத்திய நகரமான திருச்சிக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சியானது நிறைவு பெறவில்லை.

எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு அமைந்த அரசுகள், தலைநகர மாற்றம் குறித்து போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தில், இரண்டாவது தலைநகரம் அமைப்பது குறித்த முயற்சிகள் வடிவம் பெறாமல் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்கின்றனர் சில வல்லுநர்கள்.

“இதை இரண்டாம் தலைநகரம் என்று அழைப்பதற்கு பதிலாக, பிரதான செயல்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் புராஜெக்ட் நகரங்கள் என்று இவற்றை அழைக்கலாம். இதன்மூலம், ஒரு மாநிலத்தின் பகுதிகளுக்குள் மக்களுக்குத் தேவையான பூகோள இணைப்பு, அரசு, தொழில், சமூக-கலாச்சார செயல்பாடுகள் போன்றவை அமையும்” என்றுள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்கூல் ஆஃப் பிளானிங் அன்ட் ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர்.அப்துல் ரசாக் முகமது கூறுகிறார்.

“சென்னையை விரிவாக்கிக் கொண்டே செல்வதற்கு பதிலாக, வேறு சில நகரங்களுக்கு அம்சங்களைப் பகிர்ந்தளிக்கலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேலும், ஒரு மாநிலத்தில் அரசியல், வர்த்தகம் மற்றும் நிர்வாக நோக்கங்களுக்கு மாற்று தலைநகரங்கள் இருக்க வேண்டுமென்கிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்ஜி.தேவசகாயம். சென்னையில் தொடர்ந்து விரிவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக, அங்கு பல விரும்பத்தகாத உள்கட்டமைப்பு சிக்கல்கள் எழுகின்றன. காவேரி கரையில் அமைந்துள்ள திருச்சியில் ஒரு மாற்று தலைநகரம் அவைது மோசமான ஐடியா அல்ல” என்று அவர் மேலும் கூறுகிறார்.

“ஆனால், ஆந்திராவில் அமராவதி விஷயத்தில் நடந்ததுபோன்று இங்கும் நடந்துவிடக்கூடாது. வேளாண்மை நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கப்பட வேண்டியுள்ளது. அதேசமயம், புதிய தலைநகர அமைவு என்பது வெறும் ரியல் எஸ்டேட் அம்சங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே திட்டமிடப்படக்கூடாது. தற்போதைய தொற்றுநோய் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரை வைத்திருக்கும் தற்போதைய அரசு, மாற்று தலைநகர விஷயத்திற்கு மறுப்பை தெரிவிக்காது என்றே எதிர்பார்க்கலாம்.

“மாற்று தலைநகரம் அமைப்பதென்பது அரசியல் மற்றும் நிர்வாக முடிவு சார்ந்தது. எந்தக் கட்சியான மாற்று தலைநகரம் குறித்து திட்டத்தை அறிவிக்கிறதோ, அக்கட்சிக்கு பொதுத்தேர்தலில் அதிக கவனம் கிடைக்கும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷியாம்.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, அரசியல் கட்சிகள், சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளுக்கு போதிய கவனம் செலுத்துவதில்லை என்ற குறைபாடு உள்ளதாகவும் கூறிய அவர், எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில் திருச்சியில் கட்டுமானம் தொடங்கப்பட்ட முதலமைச்சர் அலுவலகத்தின் மிச்சங்கள் இன்னும் அங்கே இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் ஹரி கே தியாகராஜன் கூறுவதாவது, “சமூக-பொருளாதார காரணிகளை முன்வைத்து, பல நிறுவனங்கள் சென்னையை விட்டு வெளியேற விரும்புகின்றன. ஏனெனில், சென்னையில் அலுவலக வாடகை இடங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.

மாற்று தலைநகரம் மூலமாக, இந்த சிக்கல்களைத் தவிர்த்து, பல புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்களும் எழாது. ஏற்கனவே, மிகுந்த நில மதிப்பு காரணமாக, சில ஐடி நிறுவனங்கள், சென்னையை விட்டு வெளியேறிவிட்டன” என்றுள்ளார் அவர்.

 

நன்றி: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்