சென்னை: தமிழகத்தில் புதிய ரயில்களை இயக்க, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ரயில்வே அமைச்சரை மீண்டும் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயணியர் சங்கங்களிடமிருந்து எழுந்துள்ளது.

ரயில்வே துறையானது ஆண்டுதோறும் புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில், ரயில் கால அட்டவணை 2019 ஜூலையில் வெளியிடப்பட்டது.

எனவே, இந்தாண்டிற்கான ரயில் கால அட்டவணை தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.
இப்பணி தொடர்பாக, பெங்களூரில் பிப்ரவரி 26 முதல் 28 வரை, ரயில் கால அட்டவணை மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களின் முதன்மை கால அட்டவணை கட்டுப்பாட்டாளர்களும், மண்டலங்களுக்கு உட்பட்ட ரயில்வே கோட்டங்களின், ரயில் கால அட்டவணை கட்டுப்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

ரயில்வே கால அட்டவணையில், புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள், தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களின் நீட்டிப்புகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த கோரிக்கைகள் குறித்து, தமிழக எம்.பி.,க்கள், ரயில்வே அமைச்சகத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என ரயில் பயணியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.