கோவை: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறியுள்ளதால், இந்தியா சார்பாக, அந்நாட்டுடன் விரைவில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளத்தக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஐரோப்பிய யூனியன் என்று வரும்போது, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆனால், தற்போது பிரிட்டன் வெளியேறிவிட்டதால், அந்த நடைமுறை சிக்கல்கள் பற்றி பிரிட்டன் கவலைப்பட தேவையிருக்காது.

இந்திய அரசு சிறிது முயற்சி மேற்கொண்டு, பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டால், திருப்பூர் உள்ளிட்ட பின்னலாடை தயாரிப்பு நகரங்களுக்கு அதிகளவில் எளிதான ஆர்டர்கள் கிடைக்கும்.

இதன்மூலம், இந்திய ஆடைகள் பிரிட்டன் சந்தையில் வரியின்றி இறக்குமதியாகும் வாய்ப்புகளும் உண்டாகும். இதன்மூலம், சரிவை சந்தித்து வரும் பின்னலாடைத் தொழில் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.