சென்னை: தமிழக மாநில பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல், அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள்  சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி உள்ளனர்.   தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு வருகின்றன. இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் சமீப காலமாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறது. மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்று கூறி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு  மாநில பாஜக  செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச்செயலாளர் முரளிதரராவ் உரையாற்றுகின்றனர். இதில் தமிழக அரசியல் களம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.