சேலம்:

த்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில்,‘அத்திவரதர் சிலையை இடம் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

அனைத்து பாதுகாப்பு தொடர்பாக,  நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையிலே எதிர்த்து குரல் கொடுப்பார்கள். கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்துக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன.  உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, அணை கட்டும் விவகாரத்தை பொறுத்தவரையில் எந்தவித புதிய அணை கட்டுவதோ, தண்ணீரை தடுக்கவோ, நீரை மறுபக்கம் திருப்பி விடவோ கூடாது. அதன் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். அந்த தீர்ப்பு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்க ளாலும் பின்பற்றப்படவேண்டும் .ராசிமணல் விவகாரமும் அப்படித்தான் என்றார்.

அத்திவரதர் சிலையை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு,   தற்போது தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்ப்பட்டு வருகிறது. அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோவில் குருக்களிடம் வேறு ஏதாவது இடத்தில் அத்திவரதர் சிலையை பொதுமக்கள் தரிசனத்துக்காக வேறு இடத்தில் வைக்கலாமா என்பத குறித்தும் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது.  இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

கர்நாடக பிரச்சினை குறித்த கேள்விக்கு, இது அந்த மாநில பிரச்சினை. அதில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது என்று நாசூக்காக தவிர்த்துவிட்டார்.

சேலம் உருக்காலை பற்றி கேள்விக்கு,  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயும், அதைத் தொடர்ந்து அவருடைய அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று குரல் கொடுத்திருக்கின்றோம். தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவீர்களா என்ற  கேள்விக்கு,  உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.வால் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்கே நன்றாக தெரியும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அறிவிப்பை அந்த அபிடவிட்டில் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த குறிப்பிட்ட தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.