சிட்டுக்குருவிகளை  கொல்கிறதா செல்போன்  டவர்கள்?: 2.o சொல்வது எந்த அளவுக்கு சரி?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினி + ஷங்கர் கூட்டணியின் 2.o திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. வசூல் விபரங்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்தாலும், படத்தைப் பற்றி பாஸிட்டிவாகவே சொல்லி வருகிறார்கள் ரசிகர்கள்.

படத்தின் பிரம்மாண்டமும் அழகியலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கிறது. தவிர, பறவைகள்  உள்ளிட்ட உயிரினங்களின் அவசியத்தையும் சொல்லியிருக்கிறது.

அதே நேரம், “செல்போன் டவர்களால் நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளே இல்லாமல் போய்விட்டது” என்கிறது இந்தப்படம்.

செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவிகளின் கருவை சிதைப்பதாகவும், முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாவதாகவும் கூறப்படுகிறது. குருவிகளின் “தூரத்தைக் கணக்கிடும் தன்மையை”யும் செல்போன் கதிர்வீச்சு அழித்துவிடுவதாகவும் கூறுகிறது.

உண்மையில் கடந்த சில வருடங்களில் நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் அருகிவிட்டது.. ஏன்.. சுத்தமாகவே இல்லாமல் போய்விட்டது உண்மைதான்.

அதே நேரம் இதற்குக் காரணம், 2.o சொல்வதுபோல செல்போன் டவர்கள்தானா?

இது குறித்து பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள், “சிட்டுக்குருவிகள் அருகிப்போவதற்கான முக்கிய காரணமாக செல்போன் டவர்கள் இருக்கின்றன என்று சில காலமாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு செய்துதான் சொல்ல முடியும். அதே நேரம், நாகரீகம், வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் நடத்தும் வன்முறையால்தான் சிட்டுக்குருவிகள் உட்பட உயிரினங்கள் அழிகின்றன” என்றார்கள்.

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது:

“நாகரீகம் வளர்ச்சி என்கிற பெயரில் மனிதன் நடத்திய நகர்மயமாதல் சிட்டுக்குருவி உள்ளிட்ட உயிரினர்களை அழித்திருப்பது உண்மை. உதாரணாக சென்னயை எடுத்துக்கொள்வோம். முன்பெல்லாம் வீடுகளில் திண்ணை என்று இருக்கும். வீட்டுக்கு முகப்பாக.. காற்று வந்துபோகும் இடமாக அமைந்திருக்கும். அதன் தாழ்வாரத்தில் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட சில பறவைகள் கூடுகட்டி வாழும்.  ஏன் வீட்டின் ஓடுகளில், உள்ளே தூண்களில்கூட கூடு கட்டி வாழ்ந்தது.

ஆனால் சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வெளிக்காற்றே வீட்டுக்குள் வர முடியாதபடி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிவிடுகிறோம். இதில் ஏ.சி. வேறு. இதனால் நகர்ப்புற வீடுகளில் குருவிகள் கூடுகட்ட முடியாமல் போய்விடுகிறது.

தவிர எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைகிறது. இதனால் குருவிகளுக்கு ஆகாரமாக இருக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் குருவிகள் உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் நகர்ப்பகுதிகளில் வாழ்ந்த குருவிகள் பட்டினி கிடந்தே மாண்டுவிட்டன. மாண்டுகொண்டு இருக்கின்றன.

நகர்மயமாதலின் இன்னொரு கேடு.. பலசரக்குக் கடைகளுக்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள்  பெருகுவது. பலசரக்குக்கடைகளில் பொருட்களை கட்டுவதற்கு பெரும்பாலும் காகிதங்களையே பயன்படுத்துவார்கள். அதை வாங்கிச்செல்லும்போது பொருட்கள்.. அதாவது தானியங்கள் சிறிது சிந்தும். அது பறவையினங்களுக்கு உணவாகும்.

ஆனால் பல்பொருள் அங்காடிகளில் எல்லாமே பிளாஸ்டிக்தான். இறுக கட்டிவிடுகிறார்கள்.  இதனால் நாம் வாங்கும் பொருட்கள், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

மேலும் நகர்ப்புறங்களில் கட்டிடங்கள் பெருகப்பெருக..  வயல்வெளிகள் தோட்டங்கள் அழிந்துவிட்டன.

இன்னொரு கொடுமை இருக்கும் வீட்டுத் தோட்டங்கள் மற்றும்  வயல்களிலும் மருந்துகளைத் தெளித்து, பூச்சிகளை கொன்றுவிடுகிறோம். இதனாலும்  இல்லாமல் நகர்ப்புறங்களில் குருவிகள்  அழியத்துவங்கின” என்கிறார்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள்.

அதே நேரம், “இதற்காக எல்லாம் சோர்ந்து போய்விட வேண்டாம். இப்போது நினைத்தாலும் குருவி இனங்களை வாழவைக்க முடியும்” என்று நம்பிக்கை தருகிறார்கள்.

“உங்கள் வீட்டின் அருகில் சிட்டுக்குருவிகள் வருகின்கின்றனவா என்று கவனித்து பாருங்கள்.  அப்படி வந்தால், ஜன்னலோரத்தில் அல்லது பால்கனியில் சிறு குவளையில் கொஞ்சம் தண்ணீர் வையுங்கள். அப்படியே கொஞ்சம் தானியங்கள் வையுங்கள்.

விருப்பம் இருந்தால் இன்னும் ஒன்றும் செய்யலாம். ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிடுங்கள். சிட்டுக்குருவி தன் குடும்பத்துடன் உங்கள் வீட்டுக்கு வந்து அங்கேயே அழகாய் வாழும்” என்கிறார்கள் பறவையின ஆர்வலர்கள்.

மொத்தத்தில் குருவிகள் வாழ்வாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை 2.o ஏற்படுத்தி உள்ளது.

– டி.வி.எஸ். சோமு