நெட்டிசன்:

பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… 

முதல்வர் காப்பீடு

முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நன்றி !

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாதி மக்கள், முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வரவில்லை… ஏன் வரவில்லை, காப்பீட்டுத் திட்டம் என்றாலே அவர்களில் யாருக்கும் தெரியவில்லை, அப்படித் தெரிந்தவர்களுக்குக் காப்பீட்டுத்திட்ட சலுகை கிடைப்பதில்லை.

வறுமையை கனவில்கூட உணர்ந்திராத பல லட்சம் பேர்கள், காப்பீட்டுத் திட்ட சலுகையைப்பெற்று, சிறப்பாக இருக்கிறார்கள்… இந்தப் பிரச்னையைக் களைவதும், தீர்வு சொல்வதும் மிகவும் எளிது முதலமைச்சர் அவர்களே…

உணவுப்பங்கீட்டு அட்டையின் தரம் -வண்ணத்திலேயே அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களா என்ற விஷயம் அடங்கி விடுகிறது, அது போதுமே… இன்னின்னின உணவுப்பங்கீட்டு (ரேசன் கார்டு) அட்டையை வைத்திருப்பவர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வந்து விடுவார்கள் என்று ஒரே உத்தரவில் மக்கள் குறையைத் தீர்த்து விடலாமே…

காப்பீட்டுத் திட்ட கார்டு பெற இப்போதுள்ள நடைமுறையைப் பாருங்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, முதலில் விண்ணப்ப மனு வாங்க வேண்டும், அடுத்து பழைய ரேசன் கார்டு, இப்போதுள்ள ஸ்மார்ட் ரேசன் கார்டு இரண்டையும் எடுத்துக்கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப மனுவோடு இன்னொரு நாள் போகவேண்டும்,

அங்கு வரிசையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு, அந்த ஆவணத்துடன் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும்,

அங்கே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர் என்ற சான்றாவணம் பெற்றபின் (அதற்கு எத்தனை நாள் ஆகும் என்பது தனிக்கதை)மீ ண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரவேண்டும்,

அதன்பின்னரே முதல்வர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை கைக்கு வரும்…

ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கையில் இந்த பொறுப்பைக் கொடுத்தாவது (சமூக இடைவெளியுடன்) இதை ஒழுங்கு படுத்தினால், அடித்தட்டு மக்கள் இந்த கொரோனா காலத்தில் கோடிமுறை கும்பிட்டு வைப்பார்கள் உங்களை…