நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் முடங்கியுள்ளது… இல்லை… இல்லை, ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டு உள்ளது என்றே கூற வேண்டும்.  மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்,  அரசியல் சட்டத்தையே தாங்கள்தான்  தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற தேர்தல் ஆணையத்தின் மமதை  போன்றவற்றால்தான்,  இந்திய மக்கள் தற்போது அளவில்லா துயரத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து முன்கூட்டியே சரியான திட்டமிடல் வகுக்காமல், ஒருவர் மீது ஒருவரை குற்றம் சாட்டிக்கொண்டே மத்திய மாநில அரசுகள் நாட்களை கடத்தி வந்ததால், இன்று உலகிலேயே தொற்று பாதிப்பில் முதல் நாடாக இந்தியா திகழும் அவலம் அரங்கேறியுள்ளது…

நோயாளிகளுக்கு தேவையான மருந்து தட்டுப்பாடு ஒருபுறம், இறக்கும் நோயாளிகளை எரிப்பதற்காக மயானங்கள்  இன்றி சாலையோரமும், நதியோரமும், மொத்தம் மொத்தமாக எரியூட்டப்படும் வேதனைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புக்கு, 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி, பல மாநிலங்களில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களும் காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம்  மத்தியஅரசும், தேர்தல் ஆணையமும்தான். அத்துடன்  மாநில அரசின் மெத்தனமும் ஒரு காரணம்.

கடந்த ஆண்டு (2020) கொரோனா பாதிப்பு காரணமாக, உலக நாடுகள் பட்ட அவஸ்தை, இந்தியா எதிர்கொண்ட பொருளாதார பிரச்சினை  குறித்து, மத்திய, மாநில அரசுகள் சற்றே சிந்தித்து பார்த்திருந்தால், இன்று இவ்வளவு பெரிய அவலத்தை எதிர்கொள்வதில் இருந்து தப்பித்திருக்க முடியும்.

என்ன செய்வது…. உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒருபோதும் அரசியல் கட்சிகளுக்கிடையேயும், மக்களிடையேயும் ஒற்றுமை கிடையாதே.. இது நமது நாட்டின் சாபக்கேடாவே தொடர்கிறது.

ஆளும் கட்சி எதை செய்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வாடிக்கையாகவே உள்ளது. அதுபோல, எதிர்க்கட்சிகளையும், அவை கூறும் ஆலோசனைகளையும் செவிமடுக்க ஆளும் கட்சி  தவறுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. நாடு சந்திக்கும் இக்கட்டான பிரச்சினைகளிலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்களிலும்கூட, ஆளும்கட்சி எதிர்க்கட்சிகள் இடையே இணக்கமான சூழல் ஏற்படுவதில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு,  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்குவது மட்டுமின்றி மக்கள் நலனையும் குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள். இதை  எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவர்களும் நினைத்துப்பார்ப்பது கூட இல்லை.  மக்களை பலிகடாவாக்கவே அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன.

இதன் பாதிப்புதான், இன்று பல மாநிலங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக உள்ளது. கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் இல்லை, ரெம்டெசிவர் இல்லை, தடுப்பூசி இல்லை என்று பல மாநிலங்கள் கூக்குரலை எழுப்பும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளன.

உண்மை நிலவரம் இப்படியிருக்க, பல மாநிலங்கள், மக்களின் வாழ்வாதாரத்தை தடுத்து, மீண்டும் பகுதி நேரம், இரவு நேரம், முழு ஊரடங்குகளை அறிவித்து  உள்ளன. இதனால் பாதிக்கப்படுவது யார்?   அரசியல்வாதியா….? அப்பாவி மக்கள் தானே…

இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி வருவதற்கான அறிகுறி ஜனவரியில் தெரிய வந்த உடனேயே, அதை மேலும் பரவாமல் தடுப்பதற்காக, எடுக்க வேண்டிய நடவடிக்கை, மருத்துவ வசதிகள் போன்றவற்றை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்காமல் தான்தோனறித்தனமாக செயல்பட்டதன் பாதிப்புதான் தற்போதைய அபாயகரமான சூழலுக்கு வித்திட்டுள்ளது. இதற்கு யார் காரணம்? மத்தியஅரசா…. மாநில அரசா…?   இதை மக்களை தீர்மானித்துக்கொள்ளட்டும்.

இந்த சூழலில்தான் தமிழகத்திலும் கொரோனா 2வது அலை மேலும் உக்கிரமடைந்துள்ளது. நாளொன்றுக்கு 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 25 சதவிகிதம் அளவுக்கு தொற்று பரவல் அதிகரித்து உள்ளதாகவும், தற்போதைய நிலையில் (25ந்தேதி) சுமார் 1 லட்சம் பேர் மருத்துவமனையிலும் , வீடுகளிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பாதிப்பு மேலும் உக்கிரமாகும் என்றும், மும்மடங்கு வேகத்தில் பரவுவதுடன்  ஜூன்3வது வாரத்தில்தான்  கொரோனாவின் உக்கிரம் குறையும் என மருத்துவ நிவுணர்கள் எச்சரித்து வருவதுடன்,  கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடியுங்கள், முகக்கவசம் அணியுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்தே தற்போது ஒப்புக்கு சப்பானியாக, தமிழகஅரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை கண்துடைப்புக்காக, வரும் 30ந்தேதி வரை , அதாவது அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. அதன்படி,   திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், சலூன், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகளும் மூடப்படு வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ந்தேதி முதல் இரவு 10மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் 30ந்தேதி வரை மட்டுமே.

இந்த ஊரடங்கினால் என்ன பிரயோஜனம். இதை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள், எதற்காக இந்த ஊரடங்கு அறிவிப்பு, யாரை திருப்திப்படுத்துகிறது தமிழக அரசு என பல கேள்விகள் எழுந்துள்ளன.  பல தொழில்களை நம்பியுள்ள  அன்றாடங்காய்ச்சிகளான கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது குறித்து ஏதும் சிந்திக்காமலும், மக்களின் உயிர் குறித்து அக்கறை கொள்ளாமலும், வெறும் நாலு நாளைக்கு மட்டும் ஊரடங்கை கண்துடைப்புக்காக அறிவித்து உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவும் என கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு நாடுகளின் சுகாதார நிபுணர்களும், ஆய்வாளர்களும் எச்சரித்து வந்த நிலையில், அதை மதிக்க தவறிய  இந்திய அரசும், மாநில அரசுகளும் இன்று தொற்றின் அலை கைமீறி சென்றுவிட்டதாக ஒப்பாரி வைக்கின்றன. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பதில்,  பகுதி நேரம் ஊரடங்கு என்ற பெயரில் கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, அப்பாவி மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றன.

தமிழக அரசும் அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே  புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளால் என்ன செய்ய முடியும்? கொரோனாவை மாநிலத்தைவிட்டு விரட்டிவிட முடியுமா? அல்லது தமிழக மக்களை தொற்றின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றி விட முடியுமா? ஒன்றும் செய்ய முடியாது.. என்பதுதான் உண்மையான நிலவரம்.

தொற்று பரவலை உண்மையிலேயே கட்டுப்படுத்த வேண்டும் என அரசு நினைத்தால், குறைந்த பட்சம் 15 நாட்களாவது முழு ஊரடங்கை அறிவித்து, கட்டுப்பாடுகளை கடுமையாக்கி இருக்க வேண்டும்.

‘அதுபோல,  ஏழைமக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், இதை எதையுமே செய்வதற்கு முன்வராத தமிழக அரசு,  கட்டுப்பாடு என்ற பெயரில் 4 நாட்களுக்கு மட்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டு, சாமானிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளது.

மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கையை கருத்தில்கொண்டே தமிழகஅரசு 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா கெடுபிடிகளை அறிவித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது, தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம்.

தற்போது தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, வெற்றி தோல்வியால் உள்ளம் பூரிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அவர்களின் தொண்டர்களும் மீண்டும் கூட்டத்தைக்கூட்டி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அலப்பறை செய்யப்போகிறார்கள்.. இதனால் பாதிக்கப்படப் போவது யார்?

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களோ, முக்கிய நிர்வாகிகளோ, உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, தொற்று அறிகுறி ஏற்பட்டாலோ பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று ஓய்வெடுத்துக்கொள்வார்கள்… தங்களின் உயிரையும், குடும்பத்தினரின் உயிரையும் காப்பாற்றிக்கொள்வார்கள்.  ஆனால், அப்பாவி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கதி என்னவாகும்..

இதற்கிடையில்,  திமுக தலைவரோ, ‘மே 2 ஆம் தேதிக்குப் பின் இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.  அவரது கணக்கு வேறு…  10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றப்போகும் மகிழ்ச்சியில், பிரமாண்டமான முறையில் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிட்டு வருகிறார். அது அவரது ஆசை… ஆனால், அப்பாவி மக்களின் கதி…

மக்களின் வாழ்வாதாரத்துக்கு தகுந்த ஏற்பாடு செய்து, கொரோனா பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டியதே மாநில அரசின் தலையாய பொறுப்பு… இதில் விருப்பு, வெறுப்பு காட்டப்படக்கூடாது. இதை தவறினால், தமிழகமும் விரைவில்  டெல்லி, குஜராத், உபி. மாநிலங்களின் பட்டியலில் இடம்பிடித்து விடும். அதுபோன்ற ஒரு வரலாற்று பிழை ஏற்பட்டு விடக்கூடாது…

சற்றே சிந்தியுங்கள்…

கண்கெட்ட பிறகு சூரிய சமஸ்காரம் தேவையா?

கட்டுரையாளர்: ATS Pandian