டெல்லி:

ந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டு உள்ள லாக்டவுன் (ஊடரங்கு) வரும் 14ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், அதை நீட்டிப்பது குறித்து மத்தியஅரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி இமாம் தப்லிஜி மாநாட்டுக்கு பிறகு தமிழகத்திலும் அதன் தாக்கம் விரிவடைந்து வருகிறது. மேலும் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக தெலுங்கானா உள்பட 7 மாநில முதல்வர்கள், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், மக்களிடையே பேசிய பிரதமர் மோடி,  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், இந்தியா, உலகுக்கே முன்னுதாதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா, அதனைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து, செயல்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது தீவிரமடைந்துள்ள கொரோனா தாக்கம், மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக லாக்டவுனை மேலும் நீட்டிக்குமாறு பல மாநில அரசுகளும் நிபுணர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசும் அதுகுறித்து  சிந்தித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பதிவான 284 மாவட்டங்களில் மொத்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில், 1,486 அல்லது 34.71 சதவீதம் 31 மாவட்டங்களில் இருந்து வந்துள்ளது, அவை அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரைப் பெறுகின்றன.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறைந்தது 7 மாநிலங்கள், 1,367 கொரோனா வைரஸ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளன. இதனால் ஒருவேளை ஏப்ரல் 14 ஆம் தேதி 21 நாள் தேசிய ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும்,   தொடர்ந்து சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் அல்லது,  ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தலைநகர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில்,  கொரோனா வைரஸ் பரவலை   சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக மூன்றடுக்கு முகக்கவசங்கள், ‘என்- 95’ முகக்கவசங்கள், ‘வென்டிலேட்டர்’கள், பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.