சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதா, விலக்குவதா என்பது குறித்து வருகிற 29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தினசரி 6ஆயிரம் பேர் என்ற அளவில் பரவி வருகிறது. அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகம் இருந்த சென்னையில், தற்போது, தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், கோயம்பேடு சந்தையை 28ந்தேதி முதல் திறக்கவும் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

தற்போதைய நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் தொடரும் 8வது கட்ட ஊரடங்கு வரும் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.  இதற்கிடையில், இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் வழிபாட்டு ஸ்தலங்கள் திறக்கப்பட்டன. மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தும் தொடங்கியது  பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்பட்டன. கடைகள் திறப்பு நேரமும் நீட்டிக்கப்பட்டது.

மேலும், அக்டோபர்  1-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களி டம் ஆலோசனை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல, அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதாக, வேண்டாமா? என்பது பற்றியும், தளர்வுகளை அறிவிப்பது பற்றியும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி அறிவிக்க ஏதுவாக வரும்  29-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து,   ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது ஊரடங்கு முற்றிலுமாக விலக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.