விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுவதா?: மோடி மீது கனிமொழி காட்டம்

டில்லி:

விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது பிரதமர்  மோடி மீது திமுக எம்.பி. கனிமொழி காட்டமாக குற்றம் சாட்டி உள்ளார்.

தேசிய வங்கிகளில் வாங்கி உள்ள பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை டில்லியில் நேற்று முதல் 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் டில்லியில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடைபெறுகிறது. இந்த  போராட்டத்தில் கலந்துகொள்ள  தமிழக விவசாயிகளும் டில்லி சென்றுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் நிர்வாண போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விவசாயிகளின் போராட்டம் காரணமாக  முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு முழிபிதுங்கி உள்ளது.

ஏற்கனவே தமிழக விவசாயிகள் டில்லியில் முகாமிட்டு 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியஅவர்கள்  நிர்வாண போராட்டடத்திலும் ஈடுபட்டனர். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு உள்ளது பாஜகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனிமொழி எம்.பி. டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிர்ல,  தமிழக விவசாயிகள் டெல்லி வீதியில் நிர்வாண போராட்டம் நடத்திய போதே பிரதமர் ஓடி வந்து ஆறுதல் என்னும் ஒற்றைத்துணி கொண்டு மூடி மறைக்காததன் விளைவு இன்று இந்திய அளவில் 5 லட்சம் விவசாயிகள் நிர்வாண ஊர்வலத்தில் வந்து நிற்கின்றது.

விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.