சென்னை:  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகளின்படி தமிழக நகரங்களில் நடமாடும் காய்கறி விற்பனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், விலை விவரம் ஏ ரியாவுக்கு ஏரியா  மாறுபட்டு காணப்படுகிறது.  இதனால் மக்கள் காய்கறி விலை பட்டியலை வாகனங்களில் வைக்க வேண்டும் அல்லது, தினசரி விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை குறித்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நேற்று ( 24.05.2021 ) முதல் 3ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்மதில்  பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விநியோகம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனால்,  பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்ய தமிழகஅரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி நேற்று முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் வீடு தேடி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஆனால், இவ்வாறு  சென்னையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை வேறுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.  பகுதிக்கு தகுந்தவாறு விலைகள் மாற்றி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆனால்,  திருச்சியிலோ, அமைச்சர் நேரு ஏற்பாட்டின்படி, வண்டிகள் மூலம் விற்பனை  செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியல், அந்தந்த வாகனங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. முக்கியமான வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் உள்ப 10 காய்கறிகளுடன் கூடிய பையின் விலை ரூ.105 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி – காய்கறி விலைப் பட்டியல்

ஆனால், சென்னையில் காய்கறிகளின் விலையோ தாறுமாறாக உயர்ந்துள்ளது. தமிழகஅரசு சார்பில் விற்பனை செய்யப்படும் நடமாடும் வண்டிகளிலும் காய்கறி விலை, சாதாரண கடைகளில் விற்பனை செய்யப்படுவது போலவே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, திருச்சியைப்  போல,  சென்னையிலும், நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியல், அந்தந்த வாகனங்களில் ஒட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரசு அதற்கான முயற்சியை எடுத்தால், அரசு காய்கறி வண்டி என்ற பெயரில் சில வியாபாரிகள் கொள்ளையடிப்பதை தவிர்க்க முடியும்…  என்பதுடன் த்மிழகஅரசு மீது   இல்லத்தரசி களிடையே மேலும் நம்பிக்கை உருவாகும் என்பதில் ஐயமில்லை.