சசிகலா விவகாரம் பூதாகாரமாகுமா? இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது அதிமுக செயற்குழு, பொதுக்குழு…

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு  இன்று காலை 11 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே காலை 9மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2 மணி நேரம் தாதமதாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் சசிகலா விவகாரம் பூதாகாரமாக எழும்பும் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரம் கலைக்கட்டி வருகிறது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில்  நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில்  கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட  300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க  உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும்  உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான நெகட்டிவ் சான்றிதழோடு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே கட்சியினர் வானகரத்தில் திரண்டு வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளர்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணிவரை ராகுகாலம் உள்ளதால் அந்த நேரம் முடிந்த உடன் நல்ல நேரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல இன்றைய கூட்டத்தில், சசிகலா  விவகாரம் பூதாகரமாக எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வரும் 27ந்தேதி சசிகலா  4ஆண்டு சிறைதண்டனை முடிந்து விடுதலையாகிறார். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்கள் உள்பட பல நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், இன்றை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா விவகாரம் தலைதூக்கும் என பரவலாக தகவல்கள் பரவி வருகின்றன.