சென்னை:

திருவாரூர்  தொகுதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  அங்கு இன்னும் சீரமைப்பு பணிகளே முடியாத நிலையில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன.

இந்த நிலையில்,  கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பிரசாந்த் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டிருந்தது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது தேர்தல் தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், மேற்கண்ட இரு தொகுதி கள் உள்பட பதவி பறிக்கப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிஉள்பட  20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திருவாரூர் தொகுதிக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தது. அதன் படி, வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதற்கு தலைமை நீதிபதி வி.கே. தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் கொண்ட பெஞ்சானது, மனு தாக்கல் செய்யப்பட்டு நம்பர் ஆகி விட்டதா என கேள்வி எழுப்பினர். இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகள் எந்த அமர்வு விசாரிக்கும் என ஆராய்ந்து மதியம் தெரிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று  நீதிபதி சங்கரநாரயணன் அமர்வு விசாரிக்க உள்ளது.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா தேர்தலை தள்ளி வைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.