டில்லி,

த்திய அமைச்சரவையில் இருந்து  அமைச்சர்கள் சிலர்  பதவி விலகுவதாக கடிதம் கொடுத்துள்ள  நிலையில், நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலமில்லாமல் இருந்து வரும் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி உள்பட பல மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடப்போவதாக பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எனினும் இவர்களின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

வரும் 3ந்தேதி மோடி சீனா செல்ல இருப்பதால் அதற்கு முன்பாக மந்திரி சபை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் முழு ஆதரவு அளித்த அதிமுகவுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதிஷ்குமார் கட்சி எம்.பி.க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.

மேலும் வர இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் விதத்தில் வியூகம் வைத்து வருவதாகவும், அதற்காகவே அமைச்சரவை மாற்றம் நிகழும் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டங்களை இப்போதே பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் வகுக்கத் தொடங்கி விட்டனர்.

இதையடுத்தே, விமான போக்குவரத்து துறை மந்திரி கஜபதி ராஜூ, விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் ஆகியோர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும்,  தொடர் ரெயில் விபத்து காரணமாக பதவி விலக முன்வந்த சுரேஷ் பிரபின் அமைச்சர் பதவியும் மாற்றப்படுகிறது.

மேலும், தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு ரெயில்வே துறை வழங்கப்படலாம் என்றும், தமிழகத்தை சேர்ந்த வர்த்தகத் துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார் என்றும், அதிமுகவில் தம்பித்துரைக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான  தம்பிதுரை டில்லியில்  பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் காரணமாக அதிமுகவுக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.